புதுச்சேரியில் தொழிலதிபர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் பதுங்கி இருந்த கும்பல்; போலீசார் மடக்கி பிடித்தனர்

புதுவை மேட்டுப்பாளையத்தில் தொழிலதிபர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் பதுங்கி இருந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Update: 2018-12-13 00:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தாகோதண்டராமன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 5 பேர் அமர்ந்திருந்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

போலீசாரை கண்ட உடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே போலீசார் அவர்கள் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனே போலீசார் அவர்களது காரை சோதனை நடத்தினர். அப்போது காரில் ஒரு கத்தி, 2 இரும்பு பைப்புகள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 5 பேரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த மார்ட்டீன்(வயது 26), பிரான்சுவாதோட்டம் ஸ்டீபன்ராஜ்(25), மோதிலால்நகர் 2–வது குறுக்கு தெருவை சேர்ந்த தமிழ்வாணன்(25), பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(25), வில்லியனூர் மணவெளியை சேர்ந்த மாணிக்கம்(22) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் சேர்ந்து அந்த வழியாக வரும் தொழிலதிபர்களை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரியவந்தது.

மேலும் அவர்கள் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு கத்தி, 2 இரும்பு பைப்புகள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்