பல்லாரி அருகே பயங்கரம்: 3 வயது குழந்தையை கடித்து கொன்ற சிறுத்தை - வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவிப்பு

பல்லாரி அருகே 3 வயது குழந்தையை சிறுத்தை கடித்து கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் பெற்றோருக்கு வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2018-12-12 22:22 GMT
பல்லாரி,

பல்லாரி மாவட்டம் கம்பிளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோமலபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு 3 வயதில் வெங்கட சாய் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் மாலையில் வீட்டு முன்பு நின்று குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை திடீரென்று குழந்தை மீது பாய்ந்து கடித்து தாக்கியது. பின்னர் குழந்தையை தனது வாயில் கவ்வியபடி, அங்கிருந்து சிறுத்தை ஓடியது.

இதை பார்த்து ராகவேந்திரா, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுத்தையிடம் இருந்து குழந்தையை மீட்க, அதன் பின்னால் ஓடினார்கள். சிறிது தூரத்தில் வைத்து சிறுத்தையை சுற்றி வளைத்த கிராம மக்கள், குழந்தையை மீட்பதற்காக சிறுத்தை மீது கற்கள் மற்றும் ஆயுதங்களை வீசினார்கள். இதனால் குழந்தையை கீழே போட்டுவிட்டு சிறுத்தை ஓடிவிட்டது.

உடனே உயிருக்கு போராடிய தனது குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் ராகவேந்திரா அனுமதித்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். தங்களது குழந்தையின் உடலை பார்த்து ராகவேந்திரா மற்றும் அவரது மனைவி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. முன்னதாக இதுபற்றி அறிந்ததும் கம்பிளி போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கம்பிளி அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை, குழந்தையை கடித்து கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தைைய பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கம்பிளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்