விழுப்புரம்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை- ரூ.3½ லட்சம் சிக்கியது
விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தொழில் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து சென்னை ஆய்வுக்குழு அலுவலரின் அறிவுரைப்படி நேற்று மாலை 4.45 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், மூர்த்தி உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு திடீரென சென்றனர்.
அப்போது அலுவலகத்தினுள் உதவி பொறியாளர் நக்கீரன் உள்ளிட்ட அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் இருந்தனர். அவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அமர வைக்கப்பட்டு அலுவலக கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டி அதிரடி சோதனையை தொடங்கினர்.
அலுவலகத்தில் இருந்த பீரோக்கள், அலுவலர்களின் மேஜை அறைகள் ஆகியவற்றை திறந்து அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை செய்தனர். அதுமட்டுமின்றி ஏதேனும் பணத்தை பதுக்கி வைத்துள்ளனரா? என்று அலுவலக நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த அதிகாரி ஒருவரின் காரையும் மற்றும் ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் அலுவலர்கள், ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த வெளிநபர் ஒருவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர், தான் திண்டிவனம் கீழ்பூதேரியை சேர்ந்தவர் என்றும் கருங்கல் ஜல்லியை உடைத்து எம்.சாண்ட் எனப்படும் மணல் தயாரிப்பதற்கான குவாரி அமைக்க அனுமதி கேட்டு வந்ததாகவும், ஏற்கனவே இதற்காக அதிகாரிகளிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துவிட்ட தாகவும், மேலும் லஞ்சம் கேட்டதன்பேரில் ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார், அந்த அலுவலகம் முழுவதையும் தீவிரமாக சோதனை செய்தனர். சோதனையின்போது உதவி பொறியாளர் நக்கீரன் அலுவலகத்தில் இருந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்து 800 சிக்கியது. இந்த பணத்திற்கு அதிகாரிகள் உரிய கணக்கு காட்டாததால் அவற்றை போலீசார் கைப்பற்றினர். அதோடு சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. 3¼ மணி நேரம் நடந்த சோதனை இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார், லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.
இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள பணம் கோர்ட்டு அனுமதி பெற்று விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் யார், யாரிடம் இருந்து எவ்வளவு தொகையை லஞ்சமாக பெற்றுள்ளனர் என்று விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முழுவதுமாக முடிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றனர்.