முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காததால் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய 3 பேர் கைது

முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காததால் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரை காதல் ஜோடி என நினைத்து கடத்தல்காரர்கள் ஏமாந்த சம்பவமும் நடந்துள்ளது.

Update: 2018-12-12 21:56 GMT
பெங்களூரு,

பெங்களூரு சிவாஜிநகர் அருகே வசித்து வருபவர் கார்த்திக். இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி ஆந்திராவை சேர்ந்த முகமது சேக், கவுஸ்பீர், முகமது ஹபீசிடம் கார்த்திக் கூறினார். அதன்படி, அவர்கள் 3 பேரும் தலா ரூ.2½ லட்சத்தை முதலீடு செய்தனர். இதற்காக மாதம் ரூ.12 ஆயிரம் கிடைக்கும் என்று 3 பேரிடமும் கார்த்திக் கூறி இருந்தார். ஆனால் கார்த்திக் கூறியபடி மாதம் ரூ.12 ஆயிரமும் 3 பேருக்கு கிடைக்கவில்லை. அத்துடன் அவர்கள் முதலீடு செய்த பணத்தையும் கார்த்திக் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி சிவாஜிநகரில் வைத்து கார்த்திக்கை, முகமது சேக், கவுஸ்பீர், முகமது ஹபீஸ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்றனர். பின்னர் அவரை ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். மேலும் கார்த்திக்கை கடத்தியது பற்றி, அவருடன் வேலை பார்க்கும் சஞ்சீவ்நாயக் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு 3 பேரும் தெரிவித்தனர். அத்துடன் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுத்தால் தான் கார்த்திக்கை விடுவிப்போம் என்றும் கடத்தல்காரர்கள் சஞ்சீவ்நாயக்கிடம் கூறினார்கள்.

இதுபற்றி சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் சஞ்சீவ்நாயக் புகார் கொடுத்தார். இதையடுத்து, கடத்தல்காரர்களிடம் இருந்து கார்த்திக்கை மீட்க சிவாஜிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தபரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் போலீசார் கூறிய அறிவுரையின்படி சஞ்சீவ்நாயக் கடத்தல்காரர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் தான் பணத்தை கொடுப்பதாகவும், அதனை வாங்கி கொள்ள கோலார் மாவட்டம் முல்பாகல் அருகே உள்ள தைலமர தோட்டத்திற்கு வரும்படியும் கடத்தல்காரர்களிடம் சஞ்சீவ்நாயக் கூறினார். இதற்கு கடத்தல்காரர்களும் சம்மதித்தனர். இந்த நிலையில், தைலமர தோட்டத்திற்கு கடத்தல்காரர்கள் வந்துள்ளார்களா? என்பதை உறுதி செய்ய சப்-இன்ஸ்பெக்டர் ஷீலா, மற்றொரு போலீஸ்காரர் மாறு வேடத்தில் காதல் ஜோடி போல சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது கடத்தல்காரர்கள் தைலமர தோட்டத்தில் பதுங்கி இருந்துள்ளனர். ஆனால் மாறு வேடத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஷீலா, போலீஸ்காரர் காதல் ஜோடி தான் என நினைத்து, அவர்களை கடத்தல்காரர்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இந்த நிலையில், கடத்தல்காரர்கள் இருப்பதை அறிந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஷீலா, உடனடியாக இன்ஸ்பெக்டர் தபரேசுக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு வந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ்காரர்கள், கடத்தல்காரர்களான முகமது சேக், கவுஸ்பீர், முகமது ஹபீசை சுற்றி வளைத்து கைது செய்தார்கள். மேலும் சித்தூரில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த கார்த்திக்கையும் போலீசார் மீட்டனர்.

கைதான 3 பேர் மீதும் சிவாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.


மேலும் செய்திகள்