வயல்களில் மருந்து தெளிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்; வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

நெல் பயிரில் நோய் தாக்குதலை தடுக்க வயல்களில் மருந்து தெளிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-12 21:55 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

 சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நெல் சாகுபடி 65ஆயிரம் எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுஉள்ளது. இதில் பூச்சி நோய் தாக்குதல் ஏற்படும் இடங்களில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மற்றும் நோய்க்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும்போது கவனிக்க வேண்டிய முறைகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தும் முன் முக்கிய நடைமுறைகளை தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும். அதன்படி பூச்சிக்கொல்லி மருந்தை தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்து வாங்கியவுடன் அதன் மேல் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரில் உள்ள வழி முறைகளைக் கவனமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஆட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். வயல்வெளிகளில் மருந்து தெளிப்பவர்கள் பாதுகாப்பான உடைகளையும், ரப்பர் காலனி, கைகளுக்கு பாதுகாப்பு உறைகள் ஆகியவற்றை அணிந்து கொள்ள வேண்டும். மேலும் மருந்துதெளிக்கும் தெளிப்பான்களை பரிசோதனை செய்து அதில் கசிவு ஏதும் இருந்தால் அதை சரி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மருந்து தெளிக்கும் இடத்திற்கு அருகில் சுத்தமான நீர், சோப்புக்கட்டி, துண்டு ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இதனால் தற்செயலாக கை மற்றும் உடலில் மருந்து பட்டுவிட்டால் உடனடியாக சுத்தம் செய்து கொள்ளலாம். வயது முதிர்ந்தவர்களையோ, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை பராமரிக்கும் பெண்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அருகில் அனுமதிக்க கூடாது. மேலும் காலியான பூச்சி மருந்து புட்டி மற்றும் கலன்களை நீர்நிலைகளிலோ அல்லது வயலில் எறிவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் அந்த காலி டப்பாக்களை வீட்டில் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். வயலில் மருந்து தெளித்தவுடன் இந்த காலி டப்பாக்களை பூமியில் புதைத்து விடுவது நல்லது. மருந்து தெளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உணவு அருந்துவதோ, குடிநீர் குடிக்கவோ கூடாது. மேலும் மருந்தை கலக்கும் போது எப்போதும் காற்று வீசும் திசையிலேயே நின்று கலக்க வேண்டும்.

மேலும் காற்று வீசும் திசையை நோக்கி மருந்து தெளிப்பவர் நடந்து செல்ல வேண்டும். அப்போது தான் முன்னேறி செல்லும் போது மருந்தின் தாக்கம் அவரை தாக்காமல் இருக்கும். மேலும் எந்த காரணத்தைக் கொண்டும் அடைப்பட்ட நாசில்களை வாயால் ஊதி சுத்தம் செய்யக் கூடாது. அதற்கு பதிலாக சிறிய குச்சிகளை பயன்படுத்தலாம்.

மேலும் பரிந்துரை செய்யப்பட்ட சரியான அளவிலே பயிர்களுக்கு மருந்து அடிக்க வேண்டும். மேலும் அட்மா திட்ட நிதி உதவியுடன் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்கும் விவசாயிகளுக்கு தேவைப்படும் பாதுகாப்பு பொருட்கள் மூலம் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டு வருகிறது. இவைகளை கவனமுடன் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்