பெருந்துறையில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணி; தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்
கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
பெருந்துறை,
பெருந்துறை தொகுதிக்கு ரூ.237 கோடி மதிப்பில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா பெருந்துறையில் நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ பணிகளை தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து, பெருந்துறை பங்களா வீதியில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெருந்துறை வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் விஜயன், துணைத்தலைவர் ஜெகதீஸ், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் துணைத்தலைவர் மணிமேகலை, கேபிள் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சக்தி மசாலா நிறுவனர் பி.சி.துரைசாமி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் இமயம் சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, த.மா.க. மாவட்ட தலைவர் வி.பி.சண்முகம், தொழில் அதிபர்கள் டி.என்.சென்னியப்பன், சின்னசாமி உள்பட பலரும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை வரவேற்றுப் பேசினர்.
அதன்பின்னர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது 110 விதியின் கீழ் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு சர்வேக்கள் நடத்தப்பட்டன. 3 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள், 72 கிராம ஊராட்சிகளைச்சேர்ந்த அனைத்து கிராமங்களும் இந்த திட்டத்தினால் பயன்பெறும்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டிய அவசியம் குறித்து பேசினேன். பெருந்துறை தொகுதிக்கு இந்த திட்டம் இன்றியமையாதது என்று உணர்ந்த அவர்கள் ரூ.237 கோடியை ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
இந்த திட்டத்தின் வெற்றியில் அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல பெருந்துறை தொகுதி மக்கள் அனைவருக்கும் பங்குண்டு. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் இந்த திட்டம் நிறைவேற உறுதுணையாக இருந்தார்கள்.
பேரூராட்சி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு தினசரி 70 லிட்டர் குடிநீர் வழங்கி வரும் நிலையில், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேறும் போது தினசரி 135 லிட்டர் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும்.
இன்னும் 50 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போதும், பெருந்துறை தொகுதியில் குடிநீர் பஞ்சம் என்பது இல்லாமல் போகும். அந்த அளவிற்கு தொலைநோக்கு திட்டத்துடன் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கொடிவேரி அணையில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள திங்களூர் வரை 35 கிலோ மீட்டர் தூரம் எந்தவொரு இடத்திலும், இந்த தண்ணீரை எடுக்க முடியாது. ஏனெனில் குடிநீர் வடிகால் வாரிய விதிப்படி சுத்திகரிப்பில்லாத தண்ணீரை யாரும் பயன் படுத்த கூடாது என்கிற தடை இருப்பதால் கொடிவேரி தண்ணீர் முழுவதும், பெருந்துறை தொகுதி மக்களுக்கு மட்டுமே பயன் படவுள்ளது.
இந்த திட்டம் இன்றில் இருந்து 18 மாதங்களில் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் 6 மாத சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து தொகுதி மக்களுக்கு தினசரி நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சோமசுந்தரம், மோகன்ராஜ், தாமோதரன், சிவன்துரை, சிவகுமார், பாலசுப்பிரமணியம், ஆண்டமுத்து, பேரூராட்சி முன்னாள் தலைவர் பெரியசாமி, பெருந்துறை நிலவள வங்கி தலைவர் சேனாபதி, தோப்புபாளையம் பேரூர் அ.தி.மு.க. அவைத்தலைவர் நல்லசிவம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு என்ஜினீயர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.