கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள : ஸ்மார்ட் மரத்தினால் வருமானம் இல்லை; இணையதள சேவையில் சுணக்கம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இணையதள வசதி அளிக்கும் ஸ்மார்ட் மரத்தினால் வருமானம் இல்லை. மேலும், இணையதள சேவையிலும் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-12-12 22:15 GMT
கோவை, 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் இணைதள சேவை அளிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் இணையதள சேவை அளிக்கும் 25 ஸ்மார்ட் மரங்கள் அமைக்கப்பட உள்ளன. முதலில் கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஒரு ஸ்மார்ட் மரம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மரத்தை சுற்றிலும் உட்காருவதற்கு இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு ஒரே நேரத்தில் 30 பேர் உட்கார முடியும்.

ஸ்மார்ட் மரத்தில் இலைகள் போன்ற அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள பேனல்கள் மூலம் சூரிய ஒளி சக்தியை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் இணையதள சேவை 250 முதல் 300 மீட்டர் சுற்றளவிற்கு அளிக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மரத்தை அமைத்துள்ள தனியார் நிறுவனத்துக்கு கோவை மாநகராட்சி பணம் எதுவும் கொடுக்காது. அந்த மரம் அமைப்பதற்காக 30 அடி நீளம் 30 அடி அகலம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மட்டும் அந்த நிறுவனத்துக்கு கொடுக்கப்படும்.

ஆனால் ஸ்மார்ட் மரம் அமைத்துள்ள தனியார் நிறுவனம் அங்கு வந்து இணையதள சேவையை பயன்படுத்துபவர்களின் பார்வையில் படும்படி மின்னணு (டிஜிட்டல்) பலகை அமைத்துள்ளது. அதில் விளம்பரங்கள் இடம் பெறும். அந்த விளம்பரங்களுக்கான கட்டணத்தை தனியார் நிறுவனம் உரியவர்களிடம் வசூலித்துக்கொள்ளும்.

கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஸ்மார்ட் மரம் அமைப்பதற்கு ரூ.28 லட்சம் செலவாகி உள்ளது. ஆனால் அதனால் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக அந்த ஸ்மார்ட் மரத்தில் இணையதள சேவை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் கடந்த 2 நாட்களாக தான் ஸ்மார்ட் மரத்தில் இருந்து இணையதள சேவை கிடைக்கிறது. ஆனால் இணையதளத்தின் வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக அதை பயன்படுத்துபவர்கள் கூறினார்கள். சேவையில் ஏற்பட்டு உள்ள சுணக்கம் குறித்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் மரத்தினால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கோவை காந்திபுரம் வெளியூர் பஸ் நிலையத்தின் முன்புறம் ஸ்மார்ட் மரம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அங்குள்ள கடைக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு ஸ்மார்ட் மரம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது சாய்பாபா காலனியில் உள்ள ஊட்டி பஸ் நிலையத்தின் முன்பு ஸ்மார்ட் மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அது அதிகளவில் மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் ஸ்மார்ட் மரத்துடன் அமைக்கப்படும் மின்னணு பலகையை ஏராளமானோர் பார்ப்பார்கள். எனவே அதில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

ஒரு ஸ்மார்ட் மரத்தை பராமரிக்க மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு இடத்தில் ஸ்மார்ட் மரத்தை அமைக்கும் செலவு மற்றும் பராமரிப்பு செலவையும் மின்னணு பலகை மூலம் கிடைக்கும் விளம்பரத்தை கொண்டு தான் சமாளிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்