5 மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவிற்கு பின்னடைவு இல்லை: மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும் - கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
5 மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவிற்கு பின்னடைவாக கருத முடியாது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகி விடும் என்று கோவையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறினார்.
கோவை,
கோவை விமான நிலையத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு வந்தார். அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயல் பாதிப்பு குறித்து அறிக்கை ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் கூடுதல் விளக்கம் கேட்டனர். அதுவும் தற்போது அனுப்பப்பட்டு விட்டது. ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதியாக கேட்டு உள்ளோம். ஆனால் அவர்கள் எவ்வளவு நிதி தருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை கழகங்களின் ஆட்சிதான் மேலோங்கி இருக்கும். அதுதான் இங்கு வரலாறு படைக்க முடியும். 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் மக்கள் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் பா.ஜனதாவிற்கு பின்னடைவு என்பதை ஏற்க முடியாது. மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை பா.ஜனதா கட்சி 109 இடங்களிலும், காங்கிரஸ் 114 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பல இடங்களில் 1000 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி, தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை பின்னடைவு, முன்னடைவு என்று கருத முடியாது.
மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியின் பேரில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.
கர்நாடகா அரசு ஒவ்வொரு அணை கட்டும் போதும் இதனால் தமிழகம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்று கூறுகின்றனர். முதன்முதலில் 1970-ம் ஆண்டு 8.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டப்பட்ட போது உபரி நீரை தேக்குகிறோம் என்று கூறினர். அதன்பின்னர் கபினி அணை கட்டினர். அது 19 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. பின்னர் ஹேமாவதி அணை 37 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டதாக கட்டப்பட்டது.
இந்த அணைகள் கட்டுவதற்கு முன்னர் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைத்தது. நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை எல்லாம் அவர்கள் அணை கட்டி தேக்கியதால் தமிழகம் தற்போது பாலைவனமாகி வருகிறது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் டெல்டா விவசாயிகள் 2½ லட்சம் ஏக்கர் விவசாயத்திற்கு மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருந்தது.
அப்போது கர்நாடகாவில் 50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. நமக்கு அவர்கள் தண்ணீர் தர வேண்டிய நிலையில் 15 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என்று கேட்டோம். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களுக்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சி கர்நாடகத்தில் நடைபெற்றது. அவர்களிடம் இருந்து பதில் வராததால் 15 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 7 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று கோரினோம். ஆனால் அவர்கள் தரவில்லை. இதனால் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கருகின.
பருவமழை சரியாக பெய்யாததால் மார்ச், ஏப்ரல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 20 அடிக்கும் கீழே குறைந்து விட்டது. அதற்கு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே குடிநீர் தேவைக்காக 3 டி.எம்.சி. தண்ணீரை திறந்த விட கர்நாடகா அரசை கேட்டோம். அவர்கள் திறந்து விடவில்லை. நேரில் சந்தித்து பேசவும் கேட்டோம். அவர்கள் பதில் அளிக்கவில்லை.
20 மாவட்ட மக்கள் காவிரியை நம்பிதான் உள்ளனர். இதனால் அவர்களிடம் 3 டி.எம்.சி. தண்ணீர் குடிநீருக்காக கேட்டோம். அந்த மாநில அணைகளில் 34 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் இருந்தது. ஆனால் அவர்கள் நமக்கு தரவில்லை.
தற்போது மேகதாது அணை கட்டி 67 டி.எம்.சி. தண்ணீரை தேக்கினால் நமக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும். காவிரி நடுவர் மன்றம் 197 டி.எம்.சி. தண்ணீர் வழங்க கடந்த 2007-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு தண்ணீர் திறக்கும் படி உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் தண்ணீர் திறக்க வில்லை.
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு மதித்தது கிடையாது. அம்மாநில அரசு ஹேமாவதி, கபினி போன்ற அணைகளை கட்டியதால்தான் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைந்து விட்டது. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீரில் இருந்து 16 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகாவிற்கு வழங்கி விட்டது.
தற்போது கர்நாடகா அரசு பெங்களூரு நகரின் குடிநீர் தேவை என்ற போர்வையில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கிறது. இது குறித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 5 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். தற்போது மேகதாதுவில் அணை கட்டினால் ஒட்டுமொத்த தண்ணீரை தேக்கினால் தமிழகம் பாலைவனமாகிவிடும். பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு கிருஷ்ணசாகர் அணையில் இருந்து தண்ணீரை கொண்டு செல்ல முடியும்.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சுங்கம்- ராமநாதபுரம் சந்திப்பு இடையே 3.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.213 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்படும். இதற்கான திட்ட அறிக்கை வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் இறுதி செய்யப்படும். கோவை கவுண்டம்பாளையம் சந்திப்பில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.60 கோடியில் ஒரு மேம்பாலமும், கோவை ஜி.என்.மில் சந்திப்பில் ரூ.50 கோடியில் ஒரு மேம்பாலமும் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலெக்டர் ஹரிகரன், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுமித் சரண், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது ஆனைமலையை தனி தாலுகாவாக அறிவித்ததற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர்.