ஊத்தங்கரை அருகே மதுக்கடையை அகற்ற வேண்டும் மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஊத்தங்கரை அருகே மதுக்கடையை அகற்ற வேண்டும் எனக்கோரி மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளவரசன் தலைமையில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அந்தேரிப்பட்டி மற்றும் கே.எட்டிப்பட்டி ஆகிய 2 ஊராட்சிகளுக்கு இடையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த நிலையில் இப்பள்ளிக்கு அருகில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில், மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவிகளை சிலர் குடித்து விட்டு ஆபாச வார்த்தை களால் கிண்டலும், கேலியும் செய்து வருகின்றனர். இதனால் மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதனால் இக்கடையை அகற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூன் 8-ந் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது ஊத்தங்கரை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் 30 நாட்களில் கடையை அகற்றிவிடுவதாக உறுதி மொழி அளித்தனர். ஆனால் ஒரு ஆண்டை கடந்தும் இதுவரை மதுக்கடையை அகற்றாமல் உள்ளனர். இதனால் தொடர்ந்து மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே உடனடியாக இங்குள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.