ஏரியூரில் இரவில் பரபரப்பு சம்பவம்: தொழிலாளி வீட்டில் வெடிகுண்டு வீச்சு 2 பேர் காயம்

ஏரியூரில் இரவில் தொழிலாளி வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-12-12 23:00 GMT
ஏரியூர்,

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் மாது (வயது 52). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சின்னதங்கம். இவர்களுக்கு மணிகண்டன், ரமேஷ் ஆகிய 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி விட்டது. அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள். மணிகண்டனும், ரமேசும் பெங்களூருவில் சிப்ஸ் கடையில் வேலைபார்த்து வருகிறார்கள்.

மாதுவுக்கு கான்கிரீட் வீடு, குடிசை என 2 வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இரண்டுக்கும் இடையே சிமெண்டு மேற்கூரையால் ஆன சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு மாது வீட்டில் இருந்த அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கிக்கொண்டு இருந்தனர். இரவு 9 மணியளவில் வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது. இதை கேட்டதும் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் பார்த்தபோது சிமெண்டு மேற்கூரை போடப்பட்ட சமையல் அறையில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்து கிடந்தன.

மேற்கூரை சிதறல்கள் அறை முழுவதும் கிடந்தன. ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து காணப்பட்டன. இதை பார்த்ததும் மாது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டை சுற்றி பார்த்தபோது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி சென்றது தெரியவந்தது.

இதில் மாது, அவருடைய பேத்தி ரோஜா (6) ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

இதுபற்றி ஏரியூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். காயம் அடைந்த மாதுவும், ரோஜாவும் ஏரியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து மாது குடும்பத்தினர் கூறியதாவது:-

இரவில் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தோம். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. உடனே எழுந்து வீட்டின் வெளியே பார்த்தோம். 3 பேர் எங்கள் வீட்டுக்குள் வெடிகுண்டை வீசி விட்டு ஓடுவதை கண்டோம். அவர்களை விரட்டிச்சென்றோம். ஆனால் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். காயம் அடைந்த மாதுவையும், ரோஜாவையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தோம்.

எங்கள் வீட்டில் சுவேதா, நிம்மி ஆகிய 2 கர்ப்பிணிகள் உள்ளனர். அவர்கள் 2 பேரும் காயமின்றி தப்பினர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகள்