வால்பாறையில் கடுமையான வெப்பம் எதிரொலி: நீரோடைகளைத்தேடி காட்டுயானைகள் படையெடுப்பு

வால்பாறை பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் காட்டுயானைகள் நீரோடைகளைத் தேடி வருகின்றன.

Update: 2018-12-11 22:30 GMT
வால்பாறை,

வால்பாறை பகுதியில் பகல் நேர வெப்பநிலை அதிகரித்துள்ளது. அதே போல இரவு நேரத்தில் கடுமையான குளிரும், பனிப் பொழிவும் அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வற்றும் நிலை உள்ளது. இதனால் காட்டுயானைகள் கூட்டங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே காட்டுயானைகள் வனப்பகுதிகளுக்கு அருகில் தேயிலைத் தோட்ட பகுதியில் உள்ள நீரோடைகளைத் தேடி படையெடுக்க தொடங்கிவிட்டன.

நேற்று மதியம் 11 மணி முதல் அய்யர்பாடி அப்பர்பாரளை எஸ்டேட் பகுதிக்கும் கருமலை எஸ்டேட் பகுதிக்கும் இடைப்பட்ட தேயிலைத் தோட்ட பகுதிக்கு நடுவே இருந்த நீரோடையை நோக்கி வந்த காட்டுயானைகள் கூட்டம் நீரோடை பகுதியில் முகாமிட்டு நின்று கொண்டன. இந்த பகுதி அய்யர்பாடி எஸ்டேட் பகுதியிலிருந்து கருமலை எஸ்டேட் பாலாஜி கோவிலுக்கு செல்லும் சாலை ஓரத்தில் அமைந்திருந்ததால் கருமலை பாலாஜி கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் யானைகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்தனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை வனச்சரக மனித வனவிலங்குமோதல் தடுப்பு குழுவினர் அந்த பகுதியில் சுற்றுலாபயணிகள் யாரையும் அந்த பகுதியில் நிற்கவிடாமல் அப்புறப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- தண்ணீர் தேடி காட்டுயானைகள் கூட்டம் தேயிலைத் தோட்ட பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளதால் எஸ்டேட் நிர்வாகத்தினர் நீரோடைகளுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிகள், காபித்தோட்ட பகுதிகளில் பணிக்கு தொழிலாளர்களை அனுப்பும் போது அந்த பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதா? என்பதை அறிந்த பிறகு பணிக்கு தொழிலாளர்களை அனுப்ப வேண்டும். காட்டுயானைகள் நடமாடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இருந்தபோதிலும் பொதுமக்களும், சுற்றுலாபயணிகளும் ஒத்துழைப்புத்தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்