குடிபோதையில் தகராறு பெண் அடித்துக்கொலை - கணவர் கைது

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அடித்துக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

Update: 2018-12-11 22:00 GMT
சரவணம்பட்டி,

கோவை கோவில்பாளையம் வரதய்யங்கார்பாளையம் சூர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ரத்தினம்மாள் (வயது 60). இவர் பழனிசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் .இவர்கள் இருவரும் சாலையோரம் கிடக்கும் பழைய பாட்டில், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து கடையில் கொடுத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் மது அருந்தி உள்ளனர். பழனிசாமிக்கு போதை தலைக்கேறியதும் அவர் மனைவியிடம் தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் ரத்தினம்மாளை பழனிசாமி தாக்கி உள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரத்தினம்மாள் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினம்மாளின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பழனிசாமியை கைது செய்தனர். விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்துக்கொன்றதாக பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்