கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 ஆயிரம் பொருட்கள் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஜோலார்பேட்டை அருகே வங்கி ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் கிருபானந்தம் (வயது 35). தனியார் வங்கி ஊழியர். இவர் தனது காரை ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவில் ஓம் சக்தி கோவில் பகுதியில் வசிக்கும் உறவினரான துளசி என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்.
நேற்று காலை வந்து பார்த்த போது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. மேலும் காரில் பொருத்தப் பட்டிருந்த எல்.இ.டி. டி/வி உள்பட ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கிருபானந்தம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
* ஆற்காடு டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆற்காட்டை சேர்ந்த சையத் பீரான் உசேன் (63) ,செந்தில் (43), பிரபாகரன் (42), முபராக் (35), பிரபு (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓட்டல்தெரு பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த சக்கர குப்பத்தை சேர்ந்த குமார் மகன் மஞ்சு (20), புது ஓட்டல் தெருவை சேர்ந்த சேட்டு மகன் ரஞ்சித் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
* ஒடுகத்தூரை அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் அதே கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (38) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதில் வீடு முழுவதும் எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் வீடுமுழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. இந்த விபத்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் உணவுதானியங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகபொருட்கள் எரிந்து விட்டது.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஆற்காடு காதர்ஜண்டா தெருவை சேர்ந்தவர் தமிம்சாகீர் (29), ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்த சம்சுஅலியார் (45) செருப்புக் கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சம்சு அலியார் சென்று கொண்டிருந்தபோது அவரை தமிம்சாகீர் வழிமறித்து திட்டி தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில்ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தமிம் சாகீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரெயிலில் ஆந்திர மாநிலம், ஜக்கையாபேட்டையை சேர்ந்த சூர்யநாராயணரெட்டி (வயது 64) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அவர் ரெயிலில் இருந்து இறங்கிய போது தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு கை, கால், தலையில் காயம் ஏற்பட்டது. அவரை அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்-இன்ஸ் பெக்டர் கணேஷ்பாபு ஆகியோர் மீட்டு சிகிச்சைக் காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின்னர் சூர்யநாராயண ரெட்டியை ரெயில்வே போலீசார் ரெயிலில் அனுப்பி வைத்தனர்.
* ராணிப்பேட்டை காந்தி ரோட்டை சேர்ந்தவர் குமார் (23). இவர் நேற்று காந்தி ரோடு பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ராணிப் பேட்டை போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ராணிப்பேட்டை பிஞ்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (42) இவரது மகள் புஷ்பராணி. புஷ்பராணி மீது நேற்று அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (23) என்பவர் பட்டாசை கொளுத்தி போட்டுள்ளார்.
இதுகுறித்து லட்சுமி தட்டி கேட்டபோது வசந்தகுமார், லட்சுமியை ஆபாசமாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில் வசந்தகுமாரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.