கோணவக்கரை பகுதியில்: யானை வழித்தடத்தை மறிக்கும் மின்வேலியை அகற்ற கோரிக்கை
கோணவக்கரை பகுதியில் யானை வழித்தடத்தை மறிக்கும் மின்வேலியை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அரவேனுவில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலசங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் தும்பூர் போஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பெள்ளிகவுடர், பொதுச்செயலாளர் குள்ளாகவுடர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நீலகிரி மாவட்ட மக்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட மாவட்ட கலெக்டரை இடமாற்றம் செய்ய சிலர் மேற்கொண்ட முயற்சியை தடுத்து ஆணை பிறப்பித்த உச்ச நீதிமன்றத்திற்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பது கோணவக்கரை பகுதியில் கூட்டுப்பட்டா நிலத்தில் யானை வழித்தடத்தை மறித்து பொது நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியை அகற்றவும், மனித-வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தை ஆர்கானிக் இயற்கை உர விவசாய மாவட்டமாக அறிவித்து நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிப்பது. இந்த திட்டத்தின் கீழ் விவசாய சங்கங்களுக்கு நிதியை ஒதுக்குமாறு தோட்டக்கலை துறையை கேட்டுக்கொள்வது.
அரவேனு பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால் சாலையை விரிவுப்படுத்த நெடுஞ்சாலை துறையை கேட்டுக்கொள்வது, நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் தொல்லை, பணியாளர் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயம் அழிந்து வருவதால் விவசாயத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் அருணா நந்தகுமார், ஆலம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.