கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டப்பணி; தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. இன்று அடிக்கல் நாட்டுகிறார்

ரூ.237 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டப்பணியை தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. இன்று (புதன்கிழமை) அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.;

Update: 2018-12-11 22:45 GMT

பெருந்துறை,

பெருந்துறை சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை, சென்னிமலை மற்றும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றிய பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. எனவே குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பெருந்துறை, சென்னிமலை, ஊத்துக்குளி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை நிறைவேற்ற அவர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அவருடைய தீவிர முயற்சிக்கு பிறகு புதிய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. மேலும் இந்த திட்டப்பணியை நிறைவேற்ற ரூ.237 கோடி ஒதுக்கியது.

இதைத்தொடர்ந்து புதிய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டப்பணிக்கான அடிக்கால் நாட்டு விழா பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உள்ள மேல்நிலை தொட்டி அருகே இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘இந்த திட்டத்தின் மூலம் பெருந்துறை ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளும், ஊத்துக்குளி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளும், சென்னிமலை ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளும் என மொத்தம் 69 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இந்த பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் மாசு இல்லாத குடிநீர் கிடைக்கும். குடிநீர் பற்றாக்குறை என்பதே இனி இருக்காது,’ என்றார்.

மேலும் செய்திகள்