தேன்கனிக்கோட்டையில் குடிநீர் குழாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தேன்கனிக்கோட்டையில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2018-12-11 22:00 GMT
தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை பை-பாஸ் சாலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சார்பாக பிரதான குழாய்கள் சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி சாலையில் குட்டை போல் தேங்கி நிற்கிறது. குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுக்கொள்ளவில்லை.

இதனால் கடந்த 2 மாதங்களாக குழாயில் இருந்து வெளியேறி சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் அதிலேயே சென்று வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க கோரியும், சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையின் குறுக்கே கற்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குழாய் மற்றும் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்