ஆரணி அருகே: பள்ளிக்கூட பஸ் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலி - தாய் கண் எதிரில் பரிதாபம்
ஆரணி அருகே பள்ளிக்கூட பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தாய் கண் எதிரே 3 வயது சிறுவன் பலியானான்.
ஆரணி,
ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கூட்ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களை பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான பஸ்சில் தினமும் நேரடியாக சென்று ஏற்றி வந்து பள்ளி முடிந்ததும் வீடுகளுக்கு கொண்டு விடுகின்றனர். ஆரணியை அடுத்த சிறுமூர் ஊராட்சி கொட்டாய்மேடு பகுதியை சேர்ந்த அருள்மணி என்பவரது மகள் பவஸ்ரீ என்ற சிறுமி இதே பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கிறாள்.
நேற்று காலை 8 மணியளவில் கொட்டாய்மேடு பகுதியை சேர்ந்த குழந்தைகளை ஏற்றுவதற்காக பள்ளிக்கூட பஸ் சென்றது. அதனை சிறுமூரை சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (வயது 27) ஓட்டிச்சென்றார். அருள்மணி வீட்டின் அருகே சென்றபோது அவரது மகள் பவஸ்ரீயை ஏற்றுவதற்காக மனைவி கனகா அங்கு தயாராக இருந்தார். பஸ் வந்தவுடன் மகளை ஏற்றி விட்டார்.
அப்போது அவரது 3 வயது மகன் தாரகேஸ்வரன் என்ற கேசவர்ணா (3) பின்னாலேயே ஓடி வந்தான். அந்த பஸ்சில் குழந்தைகளை ஏற்றுவதற்கு உதவியாளர் ஏதும் நியமிக்கப்படவில்லை. டிரைவர் மட்டுமே இருந்தார். இதனால் கனகாவே மகளை தூக்கி படிக்கட்டில் ஏற்றி உள்ளே அனுப்பினார். அந்த நேரத்தில் பின்னால் ஓடி வந்த மகன் கேசவர்ணா, பஸ்சின் பின்சக்கரத்தின் அருகே சென்றான். அதே நேரத்தில் பஸ் புறப்பட்டது. அந்த நேரத்தில்தான் மகனை கனகா பார்த்தார். அவனை காப்பாற்றுவதற்காக செல்வதற்குள் கேசவர்ணா மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறியது. இதில் படுகாயம் அடைந்த கேசவர்ணா, கதறி அழுதான். ஆனால் பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் குழந்தைகளுடன் பள்ளிக்கு ஓட்டிச்சென்றார். அங்கு குழந்தைகளை இறக்கியபின்னர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இதனிடையே படுகாயம் அடைந்த கேசவர்ணாவை அவனது தந்தை அருள்மணி மற்றும் தாய் கனகா ஆகியோர் மோட்டார்சைக்கிளில் வைத்து அழைத்துக்கொண்டு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கேசவர்ணா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண் எதிரிலேயே 3 வயது மகன் பள்ளிக்கூட பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.