திருவள்ளூர் அருகே கார்– ஷேர் ஆட்டோ மோதல்; 9 பேர் காயம்

திருவள்ளூரில் ஷேர் ஆட்டோ மீது கார் மோதியதில் 9 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-12-11 22:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரில் இருந்து நேற்று மாலை ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புல்லரம்பாக்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த ஆட்டோவில் திரளான பயணிகள் இருந்தார்கள். ஷேர் ஆட்டோவை புல்லரம்பாக்கத்தை சேர்ந்த விஜய் (வயது 36) என்பவர் ஓட்டி சென்றார்.

அந்த ஆட்டோ திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் சாலையில் சாய்பாபா கோவில் அருகே சென்றபோது எதிரே ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த சிறுவானுரை சேர்ந்த பிரீத்தி (40), புல்லரம்பாக்கத்தை சேர்ந்த சேகர் (32), அபேல் (33), ராஜேஷ் (32), கார்த்திகேயன் (32), ராகவன் (38), விஜயா (52) ஆகிய 7 பேருக்கும், காரில் வந்த ஊத்துக்கோட்டையை சேர்ந்த சிவசங்கரின் மனைவி சித்ராதேவி (32), அவரது மகள் அபினயா பவானி (12) ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த சிவசங்கருக்கும், ஆட்டோவை ஓட்டி வந்த விஜய்க்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதைபார்த்த அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்த 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்