ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு: திண்டுக்கல் கோர்ட்டில் 7 மாவோயிஸ்டுகள் ஆஜர் - விசாரணை தள்ளிவைப்பு
ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில், திண்டுக்கல் கோர்ட்டில் 7 மாவோயிஸ்டுகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சி வனப்பகுதியில், கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். அங்கு விரைந்த அதிரடிப்படையினர் மற்றும் கொடைக்கானல் போலீசார் மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்டு நவீன்பிரசாத் கொல்லப்பட்டார்.
ரீனா ஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, பகத்சிங், காளிதாஸ், கண்ணன் உள்பட 7 மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் தனித்தனி சிறைகளில் அடைத்தனர். இதில் நீலமேகம், ரஞ்சித் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, சிறைகளில் அடைக்கப்பட்ட ரீனா ஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, பகத்சிங் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். காளிதாஸ், கண்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர்.
இதேபோல ஜாமீனில் உள்ள ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். இதையடுத்து, வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந்தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, போலீசார் ரீனா ஜாய்ஸ்மேரி உள்பட 3 மாவோயிஸ்டுகளையும் வேனில் ஏற்றி சிறைகளுக்கு அழைத்து சென்றனர்.