ஆத்தூரில்: காலிமனையை அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிலஅளவையர் கைது

ஆத்தூரில் காலிமனையை அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நிலஅளவையரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-11 22:15 GMT
ஆத்தூர்,

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் ஊராட்சி புதுப்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருக்கு வயதானதால், தனது மகன் சுப்பிரமணிக்கு, புதுப்பாளையம் அருகே காமக்காபாளையம் என்ற இடத்தில் உள்ள 1,535 சதுர அடி காலிமனையை தானமாக எழுதி கொடுத்தார்.

இந்த தான பத்திரத்தை பதிவு செய்வதற்காக குமாரசாமியின் மனைவி சுமதி, ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையர் (சர்வேயர்) தனபால் (வயது 35) என்பவரை அணுகி மனு கொடுத்தார். இதையடுத்து அந்த காலிமனையை நிலஅளவீடு செய்ய தனபால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று சுமதியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுமதி, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்சஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில், நேற்று மாலை சுமதி செல்போனில் நிலஅளவையரை தொடர்பு கொண்டார். அப்போது அவர் ரூ.5 ஆயிரத்தை தருவதாகவும், எங்கே வந்து தர வேண்டும் என்றும், நில அளவையரிடம் கேட்டார்.

அதற்கு அவர் ஆத்தூர் நகராட்சியில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை கொடுக்குமாறும் தனபால் கூறியுள்ளார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு சுமதி, ஆத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர் பணத்தை தனபாலிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு திட்டமிட்டபடி மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி, இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, பூபதிராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தனபாலை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவருக்கு நகராட்சி அலுவலகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைக்கு அழைத்து சென்று அங்கிருந்த ஆவணங்களை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

காலிமனையை அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்