கிராமிய கலைஞர்கள் நிவாரண நிதி சேகரிப்பு
திருப்பத்தூரில் நாட்டுபுற கலைஞர்களும், ஒருங்கிணைந்த மத நல்லிணக்க குழுவினரும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
நாட்டுப்புற கலைஞர்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சேகரிக்கும் பொருட்டு திருப்பத்தூர் நகரின் பல இடங்களில் தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தி மக்களிடம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களிடையே நடனமாடி புயலின் கோரதாண்டவத்தை ஆடல், பாடல் மூலம் அவர்கள் எடுத்துக் கூறினர்.
தொடர்ந்து பள்ளியின் சார்பில் கலைஞர்களிடம் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அச்சுக்கட்டு, காந்திசிலை, நான்குரோடு, செம்மொழிப்பூங்கா போன்ற பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அப்போது மதுரையிலிருந்து அந்த வழியாக வந்த வெளிநாட்டினர் கிராமிய கலைஞர்களின் நடனத்தைக் கண்டும் அதன் காரணத்தை கேட்டறிந்தும் அவர்களும் நடனமாடி நிதி சேகரிப்பில் ஈடுபட்டு தங்கள் பங்களிப்பாக நிதி வழங்கி உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டுப்புற மேடை கலைஞர்கள் சங்கப் பொருளாளர் வைகை பிரபா, மத நல்லிணக்கக ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் ரபீக் ஆகியோர் செய்திருந்தனர்.