காற்றிலே பறந்த மனிதாபிமானம்: நோய்வாய்ப்பட்ட முதியவரை மயானத்தில் விட்ட உறவினர்கள் - கலெக்டர் மீட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு

உத்தமபாளையம் அருகே நோய்வாய்ப்பட்ட முதியவரை மயானத்தில் உறவினர்கள் விட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கலெக்டர் ஏற்பாடு செய்தார்.

Update: 2018-12-11 22:15 GMT
உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 65). இவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 30 ஆண்டுகளாக அவர் தனியாக வசித்து வருகிறார்.

ஓடைப்பட்டியில் உள்ள அவரது மகன் வீட்டில் மனைவி வசிக்கிறார். கோவில் மற்றும் சாலையோரத்தில் உள்ள கடைகளின் பக்கவாட்டு பகுதிகளில் நாராயணசாமி தங்குவது வழக்கம். அவருடைய உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கொடுக்கிற உணவை வாங்கி சாப்பிட்டு பிழைப்பு நடத்தி வந்தார்.

முதுமை காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. தவழ்ந்தபடியே உத்தமபாளையம் பகுதியில் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் அவரால் நகர்ந்து கூட செல்ல முடியவில்லை. ஒரே இடத்தில் முடங்கி கிடந்தார்.

மேலும் நாராயணசாமியின் உடலில் பல்வேறு இடங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு புண்ணானது. இதற்கு சிகிச்சை பெறாததால் புழுக்கள் உருவாகி துர்நாற்றம் வீசியது. இதனால் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவர் அருகே செல்லவே, அக்கம்பக்கத்தினருக்கு அருவருப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மனிதாபிமானம் இல்லாத உறவினர்கள் சிலர், நோய் வாய்ப்பட்ட நாராயணசாமியை ஒரு தள்ளுவண்டியில் ஏற்றினர். பின்னர் அவரை அங்குள்ள மயானத்துக்கு கொண்டு சென்று இறக்கி விட்டனர். தன்னை கவனிக்க ஆள் இல்லாததால், உயிருடன் இருக்கும்போதே மயானத்துக்கு வந்ததை நினைத்து அவர் மனம் வெதும்பினார்.

இரவு நேரத்தில் மயானத்தில் உள்ள காத்திருப்போர் அறையில் தூங்குவார். பகலில் மரத்தடியில் பரிதாபமாக அமர்ந்திருப்பார். அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் தூரத்தில் நின்றபடி அவருக்கு உணவு பொட்டலங்களை வீசி விட்டு செல்வர். அதனை எடுத்து அவர் சாப்பிட்டு உயிர் பிழைத்து வந்தார்.

முதுமை, நோய் ஆகியவற்றால் நாராயணசாமி கடும் சிரமத்துக்கு ஆளானார். உறவினர்கள், அன்றாடம் வேடிக்கை பார்த்து சென்றார்களே தவிர, யாரும் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. இதனால் அவருக்கு நாளுக்கு நாள் நோய் தாக்குதல் அதிகரித்தது.

இந்தநிலையில் முதியவரின் அவதி குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் முதியவரை மீட்டு சிகிச்சை அளிக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டார். உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதனை தொடர்பு கொண்ட அவர், நாராயணசாமியை மீட்டு சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி மற்றும் வருவாய்த்துறையினர் மயானத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு பரிதாபமான நிலையில் கிடந்த நாராயணசாமியை மீட்டு 108 ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று சென்றார். அங்கு முதியவருக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறியவுடன் அவரை உத்தமபாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். கலெக்டரின் மனித நேயத்துக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து ‘தினத்தந்தி‘ நிருபரிடம் கலெக்டர் கூறும்போது, நோய் வாய்ப்பட்ட முதியவரை அவருடைய உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை. உயிரோடு இருக்கும்போதே, அவரை மயானத்தில் விட்டதை நினைக்கும்போது மனிதாபிமானம் மரித்து போய் விட்டதா? என்ற கவலை ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்தேன். அங்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையில் முதியவர் குணமாகி விடுவார், என்றார்.

மேலும் செய்திகள்