திருவனந்தபுரத்தில் முழு அடைப்பு போராட்டம்: குமரி எல்லையில் தமிழக பஸ்கள் நிறுத்தம் பயணிகள் அவதி

திருவனந்தபுரத்தில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழக அரசு பஸ்கள் குமரி எல்லை பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.;

Update: 2018-12-11 23:00 GMT
களியக்காவிளை,

சபரிமலையில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், பா.ஜனதா தொண்டர்கள் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா மாநில செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில், பா.ஜனதா, யுவமோர்ச்சா, மகிளா மோர்ச்சா தொண்டர்கள் ஏ.என். ராதாகிருஷ்ணன் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும், தடியடி நடத்தியும் தொண்டர்களை கலைத்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த முழு அடைப்பு போராட்டத்தால் குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் தமிழக அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள்  தமிழக– கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை நிறுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் வேலைக்காக ஏராளமான தொழிலாளர்கள் திருவனந்தபுரத்துக்கு சென்று வருவது வழக்கம்.  களியக்காவிளையில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால், கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்