தண்டனை காலம் முடியும் முன்பே தாதா அபுசலீமை போர்ச்சுகல்லுக்கு அனுப்ப முடியாது; மத்திய அரசு தகவல்

தண்டனை காலம் முடியும் முன்பே தாதா அபுசலீமை போர்ச்சுகல்லுக்கு அனுப்ப முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.

Update: 2018-12-11 00:07 GMT
மும்பை,

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாதா அபுசலீம் போர்ச்சுகல் நாட்டுக்கு தப்பி சென்றார். மேலும் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றார். எனினும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின் மத்திய அரசு, அபுசலீமை போர்ச்சுகல்லில் இருந்து நாடு கடத்தி இந்தியா கொண்டு வந்தது.

இதையடுத்து நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கோர்ட்டு அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

தற்போது அவர் நவிமும்பையில் உள்ள தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 16 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து உள்ளார்.

இந்த நிலையில் அபுசலீம் வக்கீல் மூலம் போர்ச்சுகல் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிறையில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. போதிய பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட நாடு கடத்தல் ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டது. எனவே தன்னை மீண்டும் போர்ச்சுகல் அழைத்து செல்ல வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ஒப்பந்தத்தின் படி அபுசலீமை 25 ஆண்டு காலம் சிறையில் அடைத்திருக்கலாம். எனவே 25 ஆண்டுகள் தண்டனை முடியும் வரை அபுசலீமை போர்ச்சுகல்லுக்கு திருப்பி அனுப்ப முடியாது என கூறியுள்ளது.

மேலும் செய்திகள்