கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம்; ரூ.10 கோடி நிலுவைத்தொகையும் வழங்க நடவடிக்கை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் என விலை நிர்ணயிக்க முத்தரப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.;

Update: 2018-12-10 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை கரும்பு விவசாயிகளுடனான முத்தரப்பு ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ., வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி, கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனர் யஷ்வந்தையா, மற்றும் அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் 2016–17ஆம் ஆண்டில் விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,200 வழங்கவேண்டும் என்றும், கரும்பு விவசாயிகளுக்கு அரசு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை ரூ.21 கோடியை உடனடியாக வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

விவசாயிகளின் கருத்துகளை கேட்டுக்கொண்ட அமைச்சர்கள், ரூ.21 கோடி நிலுவைத்தொகையை தற்போதுள்ள நிதிநிலையில் மொத்தமாக உடனடியாக வழங்க முடியாது என்றும், ரூ.10 கோடியை பொங்கல் பண்டிகைக்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் 2016–17ஆம் ஆண்டில் அரவை செய்யப்பட்ட கரும்பு 65 ஆயிரம் டன்னில், டன் ஒன்றுக்கு ரூ.2,900ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதனால் சுமார் 1,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதனால் சர்க்கரை ஆலைக்கு ரூ.4.60 கோடி கூடுதல் செலவாகும்.

மேலும் செய்திகள்