உசிலம்பட்டி அருகே விபத்தில் 2 ஆயுதப்படை போலீஸ்காரர்கள் பலி; அதிர்ச்சியில் ஒருவரது தாயும் இறந்த பரிதாபம்

உசிலம்பட்டி அருகே நண்பரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் பலியானார்கள். அதிர்ச்சியில் அவர்களில் ஒருவரது தாயும் உயிரிழந்தார்.

Update: 2018-12-10 23:15 GMT

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கருப்பு கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன். அவருடைய மனைவி அங்கம்மாள்(வயது 55). இவர்களது மகன் ராஜபாண்டி (26).

இவரும், உசிலம்பட்டி கீழப்புதூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேசும்(27) சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரர்களாக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். உடன் பணியாற்றும் மதுரையை சேர்ந்த நண்பரின் திருமணத்திற்காக நேற்று முன்தினம் ராஜபாண்டியும், தினேசும் வந்திருந்தனர்.

மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு, 2 பேரும் உசிலம்பட்டியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மதுரையை அடுத்த செக்கானூரணி கே.புளியங்குளம் பகுதியில் மதுரை–தேனி நெடுஞ்சாலையில் போலீஸ்காரர்கள் 2 பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜபாண்டியும், தினேசும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த சம்பவத்தில் ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் நேற்று இறந்துபோனார்.

இந்த விபத்து குறித்து செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படுகாயத்துடன் சாலையில் விழுந்த 2 போலீஸ்காரர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதை ஓட்டிச் சென்றவரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

இதற்கிடையே போலீஸ்காரர் ராஜபாண்டி விபத்தில் பலியான தகவலை அறிந்து அவருடைய தாயார் அங்கம்மாள் அதிர்ச்சி அடைந்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அவர் கதறி அழுதார். இந்தநிலையில் நேற்று திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்கம்மாள் பரிதாபமாக இறந்துபோனார்.

2 போலீஸ்காரர்கள் விபத்தில் பலியானது மற்றும் அவர்களில் ஒருவரது தாயார் அதிர்ச்சியில் இறந்துபோன சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்