அரசு ஊழியர்கள்– ஆசிரியர்களுக்கு 21 மாத நிலுவை தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்; ஜாக்டோ–ஜியோ கோரிக்கை

அரசு ஊழியர்–ஆசிரியர்களுக்கு 21 மாத நிலுவை தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஜாக்டோ–ஜியோ கோரிக்கை விடுத்தது.

Update: 2018-12-10 22:59 GMT

மதுரை,

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ கடந்த 4–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக அரையாண்டு தேர்வு மற்றும் ‘கஜா‘ புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு, நிவாரண பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி லோகநாதன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை கடந்த 3–ந் தேதி அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளதால், அதுவரை அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதையடுத்து அவர்களின் போராட்டம் நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, “தமிழக அரசு கடும் நிதிப்பற்றாக்குறையால் தவிக்கிறது. இருந்தபோதும் அரசு ஊழியர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ஸ்ரீதர் கமிட்டி தனது அறிக்கையை கடந்த மாதம் தாக்கல் செய்துள்ளது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. உரிய உத்தரவு பிறப்பிக்க அவகாசம் வேண்டும்“ என்று வாதாடினார்.

பின்னர் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் ஷாஜிசெல்லன், “ஸ்ரீதர் கமிட்டி அறிக்கை அளித்தும், அரசு ஊழியர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது. சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக் கமிட்டியிடம், 21 மாத நிலுவை சம்பளத்தை வழங்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தோம். ஆனால் அதற்கான அதிகாரம் தங்களுக்கு கிடையாது என்று அந்த கமிட்டி நிராகரித்துவிட்டது. கடந்த 30–ந்தேதி அறிக்கை சமர்ப்பிக்க கடைசி தேதியாகும். ஆனால் இதுவரை அந்த கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. 1.1.2016 அன்று முதல் வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை தொகையை உடனடியாக அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை தங்களது போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர்“ என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 21 மாத நிலுவை தொகையை அளிப்பது பற்றி, அரசு ஊழியர் சங்கம் அளித்த மனுவின் அடிப்படையில் விசாரித்து சித்திக் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஸ்ரீதர் கமிட்டி, சித்திக் கமிட்டி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து, அந்த கமிட்டியே ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 7–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்