தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 207 வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 207 வழக்குகளின் ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குடன் மற்ற வழக்குகளை சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி மொத்தம் 207 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றி விசாரணை நடத்துவதற்கான ஆவணங்களை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்றனர். இந்த வழக்குகளின் விசாரணையை அந்த போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே உள்ள 5 வழக்கு தொடர்பாக திரட்டிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கலவரத்தில் சேதம் அடைந்த வாகனங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்று கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று 207 வழக்குகளின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். தொடர்ந்து இந்த வழக்குகளை விசாரிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.