சமூக பிரச்சினைகளுக்கு போராட வீட்டிலிருந்து வெளியேறிய பெண் தங்களுடன் வந்துவிடுமாறு பெற்றோர் கதறல்

சமூக பணி செய்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்டதும் பெற்றோர் கண்ணீர் மல்க அவரது காலில் விழுந்து தங்களுடன் வந்து விடுமாறு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்யும் விதமாக இருந்தது.

Update: 2018-12-10 23:00 GMT
கரூர்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 54). இவருடைய மகள் ராஜேஸ்வரி (35). எம்.சி.ஏ. வரை படித்துள்ள இவருக்கு திருமணமாகவில்லை. இந்தநிலையில் கரூர் மாவட்ட காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்த இவர், மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்துவது உள்ளிட்ட சமூக பிரச்சினைகளில் பங்கெடுத்து வருகிறார். இதனால் கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு செல்லாமல் கரூரிலேயே தங்கினார். அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி விட்டு, குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ராஜேஸ்வரியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ராஜேஸ்வரி கலந்துகொண்டு, காவிரியில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி நீராதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி பேசினார். இது தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்தியை பார்த்த ராஜேஸ்வரியின் குடும்பத்தினர், அவரை தங்களுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது ராஜேஸ்வரி அங்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்ளிட்டோருடன் மணல் பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க நின்று கொண்டிருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு மகளை கண்டதும் கஸ்தூரி, ராஜேஸ்வரியின் வளர்ப்பு தந்தை பெரியசாமி ஆகியோர் கதறி துடித்து கொண்டே, அவரது காலில் விழுந்து தங்களுடன் வருமாறு கதறி அழுதனர். எனினும் அவர் விலகி விலகி சென்றார். அப்போது முகிலனின் சட்டையை பிடித்த கஸ்தூரி, ஆசையாக வளர்த்த எனது மகளை மூளைச்சலவை செய்து போராட்டத்திற்கு அழைத்துச்சென்று விட்டீர்களே என கூறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், கஸ்தூரி மற்றும் பெரியசாமியை சமாதானம் செய்து கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அவர்கள் கலெக்டரிடம், எங்களது மகள் எங்களுடன் சேர்வதற்கு உதவி செய்ய வேண்டும். ராஜேஸ்வரி வரவில்லை எனில், நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி கதறினர். அப்போது அவர்களிடம் பேசிய கலெக்டர் அன்பழகன், தாய்-மகளுக்கான தொப்புள் கொடி உறவு பிரச்சினையில் அரசோ, போலீசோ தலையிட முடியாது. உங்களது மகளிடம் நீங்களே பேச்சுவார்த்தை நடத்தி மனப்பூர்வமாக அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

அப்போது கலெக்டரிடம் மனு கொடுத்த ராஜேஸ்வரி, நான் எனது சொந்த விருப்பத்தின்பேரில் தான் சமூக பணியில் ஈடுபடுகிறேன். என் மீதான பாசத்தால் பெற்றோர் இங்கு மனு கொடுக்க வந்து விட்டனர். எனவே இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறினார். அதற்கு கலெக்டர், சமூக பணி முக்கியம் தான் என்றாலும், தாயையும் கவனித்து கொள்ளுங்கள் என அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். பின்னர் வெளியே வந்ததும் ராஜேஸ்வரிக்கும், அவரது பெற்றோருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

முடிவில் பெற்றோரிடம் நீண்டநேரமாக மனம் விட்டு பேசிவிட்டு அங்கிருந்து ராஜேஸ்வரி கிளம்பினார். பெற்றோர் மற்றும் மகளுக்கு இடையேயான பாசப்போராட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மற்றவர்களை நெகிழ செய்தது.

மேலும் செய்திகள்