கடலூரில்: வடிகாலுக்கு பள்ளம் தோண்டிய போது டீக்கடை இடிந்து விழுந்தது - பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
கடலூரில் இம்பீரியல் சாலையோரம் வடிகால் வாய்க்காலுக்கு பள்ளம் தோண்டும் போது டீக்கடை கட்டிடம் இடிந்து விழுந்தது, இதனால் பொக்லைன் எந்திரத்தை கடைக்காரர்கள் சிறைபிடித்தனர்.
கடலூர்,
கடலூர் இம்பீரியல் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இம்பீரியல் சாலையோரம் உள்ள நகைக்கடைக்கு அருகில் டீக்கடையையொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று மதியம் பள்ளம் தோண்டினார்கள். அப்போது டீக்கடை கட்டிடத்தின் அஸ்திவாரம் உள்வாங்கியதை தொடர்ந்து கட்டிடமும் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
முன்னதாக கட்டிடத்தின் சுவர்கள் இடியும் சத்தம் கேட்டதும், கடைக்குள்ளிருந்தவர்கள் வேகமாக வெளியேறிவிட்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த டீக்கடைக்கு அருகில் உள்ள கட்டிடமும் சேதம் அடைந்து உள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பொக்லைன் எந்திரத்தை கடைக்காரர்கள் சிறைப்பிடித்தனர். இந்த கடை எஸ்.என்.சாவடியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமானதாகும். கடையை மீண்டும் கட்டி தந்தால் தான் பொக்லைன் எந்திரத்தை விடுவிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இது பற்றி சங்கர் கூறுகையில், கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே டீக்கடையையொட்டி வடிகால் வாய்க் கால் கட்ட பள்ளம் தோண்டினார்கள். ஒவ்வொரு கடைக்கும் ஆயிரம் ரூபாய் தந்தால் உடனடியாக கான்கிரீட் போட்டு பணிகளை முடித்து விடுவோம் என்று எங்களிடம் பணம் கேட்டனர். நாங்கள் பணம் கொடுக் காததால் வடிகால் கட்டாமல் கிடப்பில் போட்டு விட்டு, இன்றைக்கு வந்து மீண்டும் பள்ளம் தோண்டினார்கள், இதில் கட்டிடம் இடிந்து விழுந்து விட்டது என்று கூறினார்.