மேகதாதுவில் அணை கட்ட முயற்சி: கர்நாடக அரசை கண்டித்து டெல்டா விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து காட்டுமன்னார்கோவிலில் டெல்டா விவசாயிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-10 22:00 GMT
காட்டுமன்னார்கோவில், 

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்கிற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டுவருகிறது. இவ்வாறு அணை கட்டினால் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்த கொள்ளிடம், கீழணை பாசன விவசாயிகள் நேற்று காட்டுமன்னார்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். நிர் வாகிகள் அன்பழகன், பாரதி, நஜிமுதீன், லடசுமிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முத்துராமலிங்கம், பாலசுந்தரம், ஜெயராமன், நாகராஜன், மணிவண்ணன், செந்தமிழ்செல்வன், சரவணன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க கோரியும், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை பகுதியில் 2017-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரியும், திருச்சி-சிதம்பரம் இடையே நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி லால்பேட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இது தொடர்பாக காட்டுமன்னார் கோவிலில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து விவாதித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் தான், திடீரென அவர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்