மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சியளிக்க அனுமதி - மஞ்சுவிரட்டு பேரவையினர் மனு
தேனியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சியளிக்க அனுமதி தர வேண்டும் என்று வீரப்ப அய்யனார் பேரவையினர் மனு கொடுத்தனர்.
அல்லிநகரம்,
தேனியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கலெக்டர் ரூ.44 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களை 13 பயனாளிகளுக்கு வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் எந்திரம் கோருதல் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள். மொத்தம் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பாக 260 மனுக்கள் பெறப்பட்டன.
உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி லூர்துநகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள ஓடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவுக்கு ஓடை வழியாக நடந்து செல்ல அனுமதிக்காமல் பிரச்சினை செய்கின்றனர். மழைக்காலத்தில் தெருக்களுக்குள் தண்ணீர் புகுவதால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே கலெக்டர் தக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மஞ்சு விரட்டு பேரவையினர் கொடுத்த மனுவில், நாங்கள் மஞ்சுவிரட்டு காளைகள் வளர்த்து வருகிறோம். வரும் தைப்பொங்கலையொட்டி நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாங்கள் வளர்த்து வரும் இந்த காளைகளுக்கு எங்கள் ஊரில் உள்ள வீரப்ப அய்யனார் கோவில் பகுதியில் யாருக்கும் இடையூறு இல்லாமல் தகுதியானவர்களை வைத்து பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்கு அனுமதியளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.
செங்கதிர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு கொடுத்த மனுவில், சின்னமனூர் ஒன்றியம் எரசக்கநாயக்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். பல கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்க வருகிறார்கள். அங்குள்ள சில ஆசிரியர்கள் மாணவர்களை சாதியை கூறி அவமானப்படுத்துகிறார்கள். எனவே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகிறார்கள். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சிலமலை டி.எஸ்.பி.காலனி குடியிருப்போர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாய் இருந்தும் பலனில்லை. இதில் கழிவுநீர் போகும் வகையில் தூர்வார வேண்டும். அல்லது புதிதாக கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா? என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமுமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், சப்-கலெக்டர் (பயிற்சி) தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, துணைகலெக்டர் தங்கவேல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட தொழில் மைய மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வைத்தியலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.