ஊட்டியில் தெற்காசிய அளவிலான விழா: சிறந்த குறும்படங்களுக்கு தங்க யானை விருது - இயக்குனர் பாரதிராஜா வழங்கினார்

ஊட்டியில் நடந்த தெற்காசிய அளவிலான விழாவில் சிறந்த குறும்படங்களுக்கு தங்க யானை விருதை திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வழங்கினார்.

Update: 2018-12-09 22:00 GMT
ஊட்டி,

ஊட்டி பிலிம் சங்கம் சார்பில் தெற்காசிய அளவிலான குறும்பட விழா ஊட்டியில் உள்ள அசெம்பிளி திரையரங்கில் 3 நாட்கள் நடைபெற்றது. அதில் பாடி சிட்டி, காவல் தெய்வம், வுமன் நெட்வொர்க், பில்டர் காப்பி உள்பட 5 சிறந்த குறும்படங்களுக்கு தங்க யானை விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

குறும்பட விழாவில் கலந்துகொண்டு நான் எதிரிகளே என்று பேசுகிறேன். எனக்கு எதிரிகளாக இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், மீரா கதிரவன், தங்கசாமி உள்பட 20 இயக்குனர்கள் உள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயக்கும் திரைப்படத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் நான் இருக்க வேண்டியது ஆகும். நான் இன்னும் சில ஆண்டுகள் இளம் இயக்குனர்களோடு இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இன்று இளம் இயக்குனர்களோடு இருப்பது பெருமையாக இருக்கிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் கதைகளை எழுதி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் காண்பிக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது குறும்படங்கள் மூலம் கதாபாத்திரத்தை காண்பிக்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது.

இன்றைய சூழ்நிலையில் சிறுகதை மற்றும் நாவல்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஆனால் சிறுகதை போன்று குறும்படமும், நாவல் போன்று திரைப்படமும் தயாரிக்கப்படுகிறது. இளம் இயக்குனர்கள் வாழ்க்கையின் நுனியை பார்த்து கதை எழுதி திரைப்படத்தை இயக்குகின்றனர். இயற்கையாக நெருப்பு, நீர், காற்று, நிலம் ஆகியவைகளை தெய்வமாக வணங்குகிறோம். இயற்கை சீற்றமான கஜா புயல் மக்களை பாதித்து உள்ளது. இன்றைய படைப்பாளிகள் கடவுள் அருள் பெற்றவர்களாக சமூக பொறுப்புகளை உணர்ந்து படங்களை தயாரித்து வருகிறார்கள். இதனை திசை திருப்பக்கூடாது.

ஊட்டி தேவர்கள், தேவதைகள் வாழும் அற்புதமான பூமியாகும். இங்குள்ள மரம், பசுமை, இயற்கை அழகை எங்கும் காண முடியாது. இந்த இடத்தில் போதிய திரையரங்குகள் இல்லாமல் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து குறும்படங்களை வரவழைத்து 90 குறும்படங்களை திரையிட்டு உள்ளனர். இதை சினிமாவாக பார்க்கக்கூடாது. நாடுகளுக்கு இடையே கலாசார பரிவர்த்தனையாக பார்க்க வேண்டும். தற்போது சினிமாத்துறையில் தான் ஒரே இனம் என்ற நிலை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஊட்டி பிலிம் சங்க தலைவர் பாலநந்தகுமார், செயலாளர் செல்லதுரை, அசெம்பிளி திரையரங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறிய மாவட்டமான நீலகிரியில் கடுமையான முயற்சி எடுத்து குறும்பட விழாவை ஏற்பாடு செய்த குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குறும்படத்தின் மூலம் நல்ல இயக்குனர்கள் உருவாக முடியும். அவர்களது சிந்தனை, ஆளுமை போன்றவற்றை குறும்படத்தில் காண்பிக்க வேண்டும். மும்பை, கோவா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்று, படங்களை பார்த்து என்னை உருவாக்கி கொண்டேன். அதிகமான புத்தகங்களை படித்து சிந்தனையை வளர்த்து உள்ளேன்.

உடுமலையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம் செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. என் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மிகவும் அன்பு வைத்து உள்ளார். அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி மூலம் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரை வைத்து தேர்தலில் தோல்வி அடைய செய்தது, சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவனை தோல்வி அடைய செய்தது போன்ற நினைவுகளை மனதில் கொண்டு தனி சட்டமன்ற தொகுதிகள் மற்றும் பாராளுமன்ற தொகுதிகளில் அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து சட்டமன்ற, பாராளுமன்ற பிரதிநிதிகளை தேர்வு செய்தால் அவர்கள் மூலம் குரல் கொடுக்க முடியும்.

அம்பேத்கர் தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு குரல் கொடுத்து இருப்பார். இதனை கருத்தில் கொண்டு தான் ஒரு கூட்டத்தில் பேசினேன். நான் தந்தை பெரியார், அம்பேத்கர் மீது பற்று வைத்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்