வடவள்ளியில்: பா.ஜனதா பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - போலீசார் விசாரணை
வடவள்ளியில் பா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டிய மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி,
கோவை வேலாண்டிபாளையம் மண்டல பா.ஜனதா பொதுச்செயலாளர் சாமி என்கிற உதயகுமார் (வயது 45). இவர் வடவள்ளியை அடுத்த கல்வீரம்பாளையத்தில் கடை நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு கடையில், தனது நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள், உதயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதாக தெரிகிறது. இதில் அந்த மர்ம ஆசாமிகள் திடீரென்று அரிவாளால் உதயகுமாரை தலை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டினர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து விழுந்தார். இந்த தாக்குதலில் அவரின் நண்பர்கள் சிலரும் காயம் அடைந்தனர். இதனைகண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்தபடி ஓடினர்.
மேலும் அந்த மர்ம ஆசாமிகள் உதயகுமாருக்கு சொந்தமான கார் மற்றும் கடையை அடித்து நொறுக்கினர். இதில் கார் மற்றும் கடை சேதமடைந்தது. பின்னர் அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மர்ம ஆசாமிகள் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த உதயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
உதயகுமாருக்கும், அவர் கடை வைத்துள்ள கட்டிட உரிமையாளர் சங்கீதா சிவக்குமாருக்கும் இடையே வாடகை தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில் உதயக்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதால் இதில் சங்கீதாவிற்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.