உழவு எந்திரத்தில் சிக்கி சிறுவன் சாவு ; தோட்டத்தில் விளையாடிய போது பரிதாபம்
அந்தியூர் அருகே தோட்டத்தில் விளையாடியபோது சிறுவன் உழவு எந்திரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தான்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் சின்னகுளம் என்ற இடத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. அவருடைய மகன் லோகேஸ் (வயது 7). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளிக்கூடம் விடுமுறையொட்டி மாலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டம் அருகே விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து (45) என்பவர் டிராக்டரில் உழவடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் டிராக்டரை பின்நோக்கி ஓட்டி சென்றார். அதன்பின்னர் உழவு செய்வதற்காக எந்திரத்தை கீழ் நோக்கி அழுத்தினார். ஆனால் தோட்டத்தையொட்டி நின்றிருந்த லோகேசை அவர் கவனிக்கவில்லை.
இதில் உழவு எந்திரம் அவன் உடலில் சிக்கிக்கொண்டது. இதனால் அவனது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் அவன் “அய்யோ, அம்மா” என்று கூச்சலிட்டான். சத்தம் கேட்டு டிரைவர் டிராக்டரை நிறுத்தினார்.
அக்கம்பக்கத்தினரும் அங்கு சென்று பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் லோகேசை உடனே மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லோகேஸ் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த தங்கமுத்துவை கைது செய்தனர்.
இறந்த லோகேசின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.