நிலக்கோட்டை அருகே: வைகை ஆற்றில் மணல் அள்ளும் கும்பல்
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மணல் அள்ளும் கும்பலை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வழியாக வைகை ஆறு செல்கிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால், வைகை ஆற்றில் தண்ணீரை பார்ப்பதே அரிதாகி வந்தது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆற்றில் தண்ணீர் சென்றால், உறைகிணறுகளில் நீருற்று ஏற்படும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு நீங்கி வருகிறது.
இதற்கிடையே உறைகிணறுகள் மட்டுமின்றி பாசன கிணறுகளிலும் தண்ணீர் கிடைப்பதற்கு வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.15 கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக ஆற்றுக்குள் இருபக்கமும் மணலால் கரை போன்று அமைக்கப்பட்டது.
ஆனால், குண்டலப்பட்டி சுடுகாட்டு பகுதியில் கரை அமைக்காமல் விட்டுவிட்டனர். அது பாதை போன்று உள்ளது. அதை பயன்படுத்தி அந்த வழியாக வைகை ஆற்றில் இருந்து சிலர் வாகனங்களில் மணல் அள்ளி செல்கின்றனர். எனவே, வைகை ஆற்றில் மணல் அள்ளும் கும்பலை தடுக்க வேண்டும். குண்டலபட்டி சுடுகாட்டு பகுதியில் ஆற்றுக்குள் கரை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.