கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு 12-ந் தேதி தேர்தல் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் இடையே கடும் போட்டி
கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டி
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் இருந்து வருகிறார். அதுபோல, கர்நாடக மேல்-சபையின் தற்காலிக தலைவராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பசவராஜ் ஹொரட்டி இருந்து வருகிறார். அவரே மேல்-சபை தலைவராக இருக்க வேண்டும் என்றும், அந்த பதவியை தங்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மேல்-சபை தலைவர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். மேலும் கடந்த 5-ந் தேதி நடந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேல்-சபை தலைவர் பதவியை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.கே.பட்டீலுக்கு வழங்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் மேல்-சபை தலைவர் பதவிக்கு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
12-ந் தேதி தேர்தல்
இந்த நிலையில், பெலகாவி குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ளதால், கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அல்லது நாளைக்குள்(செவ்வாய்க்கிழமை) கர்நாடக மேல்-சபை தலைவர் யார்? என்பது குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.
மேல்-சபை தலைவர் பதவியை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு விட்டு கொடுக்க காங்கிரஸ் மறுத்ததால், மேல்-சபையின் தற்காலிக தலைவர் பதவியை தேர்தலுக்கு முன்பாகவே ராஜினாமா செய்ய பசவராஜ் ஹொரட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.