கோத்தகிரி அருகே: சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு

கோத்தகிரி அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2018-12-09 21:45 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள புதூர், காமராஜர் நகர், சேலாடா ஆகிய கிராமங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் வேட்டையாடும் சிறுத்தைப்புலி, பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது. இதனால் பொதுமக்களும், தோட்ட தொழிலாளர்களும் பீதியில் உள்ளனர். எனவே குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் முருகன், வீரமணி, தருமன் மற்றும் வனத்துறையினர் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ள கிராமங்களில் நேரில் சென்றனர். தொடர்ந்து அங்கு குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு வனச் சரகர் சீனிவாசன் கூறிய தாவது:-

சிறுத்தைப்புலி ஓரிடத்தில் தொடர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை. அது நாள் ஒன்றுக்கு 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நடமாடும். சிறுத்தைப்புலியை பொதுமக்கள் பார்த்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அந்த சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதனால் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் தொடரும் பட்சத்தில், அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டவோ அல்லது கூண்டு வைத்து பிடிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்