கிருஷ்ணகிரியில் 1,384 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.7 கோடி நல உதவிகள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
கிருஷ்ணகிரியில் 1,384 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரத்து 350 மதிப்புள்ள நல உதவிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது. இதற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு 1,384 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரத்து 350 மதிப்பில் நல உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் பால் வளத்தலைவர் தென்னரசு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், கல்லூரி முதல்வர் கீதா, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூரில் உள்ள ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1986-87-ம் ஆண்டில் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள், ரூ.8 லட்சம் மதிப்பிலான மேல்நிலை மற்றும் தரைதள நீர்த்தேக்க தொட்டிகளை கட்டி கொடுத்துள்ளனர். இதன் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவுக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு, நீர்த்தேக்க தொட்டிகளை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பேசுகையில், இந்த பள்ளிக்கு, ராஜாஜி கலையரங்கம் மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகிய வசதிகளும், பள்ளி கட்டிடங்களுக்கு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக வர்ணம் பூச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 15 நாட்களுக்குள் இந்த திட்டங்களை ஆய்வு செய்து, பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். விழாவில் முன்னாள் மாணவர் ஜெ.பி. என்ற ஜெயப் பிரகாஷ், பள்ளியின் வளர்ச்சிக்கு, 1 லட்ச ரூபாய் நிதி வழங்கினார்.
விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார், பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடரெட்டி, நகர அ.தி.மு.க. செயலாளர் நாராயணன், கூட்டுறவு வங்கி தலைவர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர்கள் சார்பில் வெங்கடேஷ், பெருமாள் பிள்ளை, சரவணன், குழந்தைவேல் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் வேலு நன்றி கூறினார்.