பண்ணந்தூர் ஏரியில் பூத்துக்குலுங்கும் மருத்துவ குணம் கொண்ட சிவப்புஅல்லி மலர் பொதுமக்கள் அதிசயமாக பார்க்கிறார்கள்
பண்ணந்தூர் ஏரியில் பூத்துக்குலுங்கும் மருத்துவ குணம் கொண்ட சிவப்புஅல்லி மலரை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கிறார்கள்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணந்தூர் ஏரி சுமார் 96 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் ஐப்பசி கார்த்திகை மாதத்தில் அதிக அளவு சிவப்பு அல்லி மலர்கள் பூப்பது வழக்கம். அதே போல் இந்த வருடம் ஏரி முழுவதும் அல்லி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவில் பூக்கள் பூத்து காணப்படுகிறது. இருப்பினும் அதிகாலையில் மட்டுமே பூத்து காணப்படும் இந்த அல்லி மலரை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி, மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இந்த மலர் பெங்களூரு, ஓசூர், திருச்சி, கோவை ஆகிய ஊர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த சிவப்புஅல்லி மலர்கள் மருத்துவ குணம் கொண்டதாகும். செந்நிற மலர்களையுடையதால் இதை செவ்வல்லி என்று அழைக்கிறார்கள். இதன் இலை, பூ, விதை, கிழங்கு ஆகியவை மருத்துவகுணமுடையதாகும்.
இது குறித்து பண்ணந்தூர் கிராம பெரியவர்கள் சிலர் கூறுகையில், இந்த மலர் இறைவனுக்கு படைக்கும் மலராகும். இதய படபடப்பு, ரத்தம் பெருக்கம், கல்லீரல் பலமடைதல் போன்றவற்றிற்கு இந்த பூக்கள் நல்லது என்று கூறுகிறார்கள். மேலும் உடல் உஷ்ணத்திற்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது என்று அவர்கள் கூறினார்கள்.