தலையில் அம்மி கல்லை போட்டு பெண் படுகொலை; கணவரும் தற்கொலை

கிண்டியில் குடும்ப தகராறில் கணவர் அம்மிகல்லை போட்டதால் தலையில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-09 22:30 GMT

ஆலந்தூர்,

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் முத்துராமலிங்க தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 48). இவரது மனைவி பரமேஸ்வரி (40). இவர்களுக்கு தினேஷ், சம்பத் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 7–ந் தேதி இரவு கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன், தூங்கி கொண்டிருந்த பரமேஸ்வரி தலையில் அம்மி கல்லை போட்டுவிட்டு தப்பி சென்று விட்டார்.

பரமேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மகன்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தாயை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மோகனை தேடி வந்தனர். இதுபற்றி விசாரிக்க கிண்டி போலீஸ் உதவி கமி‌ஷனர் பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மோகன், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பண்ருட்டிக்கு விரைந்து சென்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் மாமண்டூர் உள்ள தனது உறவினர் வீட்டில் மோகன் தற்கொலை செய்து கொண்டதாக படாளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘மனைவி மீது அம்மி கல்லை போட்டுவிட்டு தப்பி சென்ற மோகன் மாமண்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு இருந்தவர்களிடம் ‘‘மனைவி மீது அம்மி கல்லை போட்டு தப்பி வந்து விட்டேன்’’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார். மனைவி சிகிச்சை பலனின்றி இறந்தது அவருக்கு தெரியவில்லை. மனவேதனையில் இருந்த மோகன் அந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

மோகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து படாளம் போலீசார், கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி கிண்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்