நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சேலத்தில் கே.வி.தங்கபாலு பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என சேலத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்தார்.

Update: 2018-12-09 23:00 GMT
சேலம், 

சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சேலம் அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். இதில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் மெடிக்கல் பிரபு, சாந்தமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி, அவர் நீண்ட நாள் வாழ வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் கூட்டணி 2004-ல் வெற்றி பெற்றது போல் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழகத்தில் பா.ஜனதாவிற்கு எதிரான அலை வீசுகிறது.

ராகுல் காந்தி தமிழகத்திற்கு யாரை நியமித்தாலும் அவரின் கீழ் செயல்படுவோம். காங்கிரஸ் தலைவர்கள் இடையே எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல், ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். காங்கிரஸ் கட்சியில் எந்த பிரச்சினையும் கிடையாது. சேலத்தில் நான் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்து விட்டேன்.

சேலம் தொகுதி காங்கிரசிற்கு ஒதுக்கப்படுவது குறித்து தி.மு.க., காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் தான் தெரியவரும், தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நாங்கள் செயல்படுவோம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் 7 பேரின் விடுதலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்