திண்டுக்கல் அருகே பரபரப்பு: தொழில் அதிபரை தாக்கி கார் கடத்தல் - போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே தொழில் அதிபரை தாக்கி காரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-12-09 22:30 GMT
திண்டுக்கல்,

சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் ராமு (வயது 40). தொழில் அதிபரான இவர், தென்னை நார் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில் விஷயமாக, மற்றொரு தென்னை நார் நிறுவன உரிமையாளரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் ராமு தனது காரில் திண்டுக்கல் வந்தார். பின்னர், திண்டுக்கல்லில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

அவருடன், திண்டுக்கல்லை சேர்ந்த தென்னை நார் நிறுவன உரிமையாளரின் நண்பர்கள் 3 பேரும் தங்கினர். இதையடுத்து, நேற்று காலை 4 பேரும் காரைக்குடிக்கு செல்வதற்காக ராமுவின் காரில் புறப்பட்டனர். திண்டுக்கல் அருகே நத்தம் சாலையில் நொச்சி ஓடைப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது ராமுவுக்கும், மற்ற 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து ராமுவை தாக்கி காரில் இருந்து கீழே தள்ளினர். பின்னர், அவர்கள் காரை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்த ராமு, திண்டுக்கல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தனது காரை 3 பேர் கடத்தி செல்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த வழியாக சென்ற வாகனங்களை சோதனை செய்தனர். இதனை பார்த்த 3 பேரும், நத்தம் அருகே மேட்டுக்கடை என்ற இடத்தில் உள்ள ஒரு சமுதாய நலக்கூடத்தில் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர், அந்த காரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு சாணார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராமுவிடம், கார் கடத்தல் தொடர்பாக சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்