காட்பாடியில் வீட்டில் தனியாக இருந்த தாய் - மகளை கட்டிப்போட்டு 35 பவுன் நகை கொள்ளை வடமாநில மர்மகும்பல் அட்டூழியம்
காட்பாடியில் வீட்டில் தனியாக இருந்த தாய் - மகளை தாக்கிய வடமாநில கும்பல் 35 பவுன் நகை, ரூ.55 ஆயிரத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிவிட்டது.
காட்பாடி,
காட்பாடி பர்னீஷ்புரம் மிஷின் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் வில்லியம்ஸ். இவரது மனைவி இந்திராணி (வயது 80). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகள் நளினி (40), வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்திராணி, நளினி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதிகாலை 3 மணி அளவில் இவர்களது வீட்டின் கதவை யாரோ சிலர் தட்டியுள்ளனர். தெரிந்தவர்கள்தான் வந்திருக்கிறார்கள் என நினைத்து இந்திராணி எழுந்து வந்து கதவை திறந்துள்ளார்.
அப்போது முகமூடி அணிந்த 6 பேர், கும்பலாக நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்களை யார் என்று கேட்பதற்குள் அந்த கும்பல் இந்திராணியை தாக்கினர். இதில் அவர் அலறவே சத்தம் கேட்டு அவரது மகள் நளினி ஓடி வந்தார். அப்போது அந்த கும்பலில் இருந்தவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கி ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு, வாயையும் துணியால் கட்டினர்.
இதையடுத்து 2 பேர் அணிந்திருந்த கம்மல், சங்கிலி உள்பட வீட்டில் இருந்த 35 பவுன் நகைகளையும், ரூ.55 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் இந்தி மொழியில் பேசியுள்ளனர். பின்னர் அவர்கள் நாங்கள் கொள்ளையடித்ததை பற்றி போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம் என தமிழில் பேசி மிரட்டிவிட்டு தப்பி ஓடினர்.
இந்த நிலையில் இந்திராணி வீட்டின் கதவு நேற்று காலை வெகு நேரம் திறந்தே கிடந்தது. ஆனால் வீட்டில் இருந்து வெளியே யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நளினி, இந்திராணியை நாற்காலியில் கட்டி போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கட்டை அவிழ்த்து அவர்களை மீட்டனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நளினி காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த நளினியை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொள்ளை நடந்த இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில்தான் ஆந்திர மாநிலம் உள்ளது. எனவே கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் திடீரென இங்கு வந்திருக்க வாய்ப்பில்லை. வட மாநிலத்தை சேர்ந்த அவர்கள் பல நாட்கள் நோட்டமிட்ட பின்னரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும். எனவே கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் வந்தார்களா? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.