மண்ணில் புதைந்து 2 கட்டுமான தொழிலாளிகள் பலி பள்ளம் தோண்டிய போது பரிதாபம்
மும்பை தார்டுதேவில், பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2 கட்டுமான தொழிலாளிகள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.;
மும்பை,
மும்பை தார்டுதேவில், பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2 கட்டுமான தொழிலாளிகள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
பள்ளம் தோண்டும் பணி
மும்பை தார்டுதேவ் துல்சிவாடி பகுதியில் ராத்தோடு என்ற கட்டுமான நிறுவனம் அங்குள்ள குடிசைவாசி மக்களுக்கு புனரமைப்பு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறது. இதில் நேற்று 2 பேர் கட்டிட பணிக்காக பள்ளம் தோண்டி கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் சரிந்தது.
இதனால் பள்ளத்தில் நின்று கொண்டு இருந்த 2 தொழிலாளிகளும் உயிரோடு மண்ணில் புதைந்தனர். இதனை கண்ட அங்கிருந்த சக ஊழியர்கள் உடனடியாக மண் குவியலை தோண்டி அவர்கள் 2 பேரையும் மீட்டனர்.
2 பேரும் பலி
இதையடுத்து அவர்கள் 2 பேரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தார்டுதேவ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர்களது பெயர் பியாஸ் கான் (வயது 24), தப்பன் தாய் (28) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.