மின்சாரம் பாய்ந்து யானைகள் பலி: வனப்பகுதியில் மின் கம்பிகளின் உயரத்தை 30 அடியாக உயர்த்த முடிவு
மின்சாரம் பாய்ந்து யானைகள் பலியாவதை தடுக்கும் வகையில், வனப்பகுதியில் உள்ள மின் கம்பிகளின் உயரத்தை 30 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பம்,
தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள ஹைவேவிஸ் அணை நிரம்பினால், சுருளியாறு மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதன்படி தினமும் 35 மெகாவாட் வீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த மின்சாரம், அடர்ந்த வனப்பகுதியில் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு உயர் மின் அழுத்த கம்பிகள் வழியாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக, கம்பம் கிழக்கு வனச்சரகப்பகுதியில் ஆங்காங்கே உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வென்னியாறு வனப்பகுதியில் செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளன. குறிப்பாக ஒரு சில இடங்களில் 12 அடி உயரத்தில் மின்கம்பிகள் செல்கின்றன. இதில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.
கடந்த மாதத்தில், 2 யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதேபோல் கடந்த 6 மாத காலத்தில் ஒரு குட்டியானை உள்பட 5 யானைகள் இறந்துள்ளன. இதற்கிடையே மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதை தடுப்பது குறித்து வனத்துறை முதன்மை செயலர், தமிழக மின்வாரிய தலைவருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக, வென்னியாறு வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தேனி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சுருளியாறு மின்நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் வென்னியாறு வனப்பகுதி உள்ளது. இது மேடான இடம் ஆகும். இங்கு 12 அடி உயரத்தில் மின் கம்பிகள் செல்கின்றன. இதில் சிக்கி யானைகள் உயிரிழக்கின்றன. இதனால் வனப்பகுதியில் கூடுதலாக மின்கோபுரங்களை அமைத்து, அதன் உயரத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 அடி அதிகரித்து 30 அடி உயரத்துக்கு மின்கம்பிகள் செல்லும்.
இது தொடர்பாக வனத்துறை மற்றும் மின்வாரியத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கம்பிகளின் உயரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மின்கோபுரங்களை உயர்த்துவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.