திருவண்ணாமலையில் கைதான தம்பதி 19 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர் வங்கி கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல்
திருவண்ணாமலையில் கருக்கலைப்பு செய்து கைதான தம்பதியின் 9 வங்கிக்கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். அவர்கள் 19 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த ஆனந்தி (வயது 50), அவரது கணவரான அரசு அதிகாரி தமிழ்ச்செல்வன் மற்றும் உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் தம்பதியின் வீட்டிற்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 7 மணிக்கு அந்த வீட்டிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பாண்டியன் மற்றும் மருத்துவ குழுவினர் சென்றனர். ‘சீல்’ உடைக்கப்பட்டு வீட்டிற்குள் அவர்கள் சென்று ஆய்வு செய்தனர். சுமார் ½ மணி நேரம் நடந்த ஆய்வுக்கு பின்னர் அவர்கள் வெளியே வந்தனர். மீண்டும் அந்த வீட்டிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அப்போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆனந்தி தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 19 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரிய வருகிறது. அவரின் சொத்து விவரங்கள் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 9 வங்கி கணக்குகள், ரூ.1 கோடிக்கும் மேல் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு மீண்டும் கருக்கலைப்பு செய்வதை தொடர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. 1 வயது முதல் 6 வயது வரையிலான பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 965 ஆக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அது 884 ஆக குறைந்து விட்டது. பெண்கள் இல்லாத சமுதாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கருக்கலைப்பு செய்த அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.