தேனி அருகே, வறுமை வாட்டியதால் : மனைவியுடன், வியாபாரி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
தேனி அருகே, வறுமை வாட்டியதால் மனைவியுடன் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். உருக்க மான கடிதம் சிக்கியது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனி,
தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்தவர் செல்வம் (வயது 59). இவர், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் முன்பு குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளை விற்பனை செய்து வந்தார். அவருடைய மனைவி முருகேஸ்வரி (49).
நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் அரளி விதையை அரைத்து குடித்தனர். பின்னர் அவர்கள், வீட்டின் முன்பு அமர்ந்திருந்தனர். சிறிதுநேரத்தில் செல்வம் மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். இது தொடர்பாக முருகேஸ்வரியிடம் கேட்டபோது, அரளி விதையை அரைத்து குடித்து 2 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் செல்வம் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேஸ்வரி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சேலம் ஜலகண்டாபுரத்தில் வசித்து வரும் அவர்களது மகள் சுதா, பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே செல்வத்தின் வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது அங்கு இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம் செல்வம் கையொப்பத்துடன் இருந்தது. அந்த கடிதத்தில், ‘எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நாங்களாகவே எடுத்த முடிவு தான். எங்கள் சாவு குறித்து யாரிடமும் எந்த விசாரணையும் செய்ய வேண்டாம். எங்களுக்கு இந்த பூமியில் வாழப்பிடிக்கவில்லை. எங்களை மன்னிக்கவும்’ என்று எழுதப்பட்டு இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘செல்வத்தின் மகன் சுதாகரன் தற்போது சிறையில் உள்ளார். அவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். வரதட்சணை கொடுமையால் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கில் சுதாகரன் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். மேலும் சில மாதங்களாக வருமானம் இன்றி செல்வம்-முருகேஸ்வரி வறுமையில் வாடினர். இதனால், ஏற்பட்ட மனவேதனையில் மனைவியுடன் பொம்மை வியாபாரி தற்கொலை செய்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றார்.