வங்கியில் கடன் வாங்கி ரூ.1 கோடி மோசடி: தொழிலதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு

வங்கியில் கடன் வாங்கி ரூ.1 கோடி மோசடி செய்த தொழிலதிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2018-12-05 22:00 GMT
தேனி,

தேனி சமதர்மபுரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், அன்னஞ்சி விலக்கு பகுதியில் பால் குளிரூட்டுதல் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். இதில், அன்னஞ்சி விலக்கை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 41) மேலாளராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் பாலகிருஷ்ணன் தனது பெயரில் தனியாக பால் பொருட்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர், தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். தொழிற்சாலை அமைக்கவும், எந்திரங்கள் வாங்கவும் கடன் கேட்டுள்ளார். இந்த கடன் பெற சரவணக்குமார் ஒப்பந்தம் தயாரித்து கொடுத்ததோடு, அவருடைய மனைவி வனிதாராணி பொறுப்புறுதி ஆவணம் எழுதிக் கொடுத்துள்ளார். அதன்படி வங்கியில் முதற்கட்டமாக ரூ.40 லட்சமும், 2-வது கட்டமாக ரூ.78 லட்சமும் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த கடன் தொகையை பெற்று பாலகிருஷ்ணன் பெயரில் பால் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், வங்கியில் வாங்கிய கடனுக்கு சில மாதங்கள் மட்டும் பணம் செலுத்திவிட்டு, அதன்பிறகு முறையாக கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளனர். அந்த வகையில் ரூ.1 கோடியே 8 லட்சத்து 79 ஆயிரத்து 401 வங்கிக்கு செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. கடன் தொகையை செலுத்தாததால், இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர் புவனேஸ்வரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் புகார் கூறப்பட்ட பாலகிருஷ்ணன், சரவணக்குமார், அவருடைய மனைவி வனிதாராணி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்