மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 4 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி சேலத்தில் போலி நிருபர்கள் 3 பேர் கைது

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 4 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த சேலத்தை சேர்ந்த போலி நிருபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-05 22:15 GMT
சேலம், 

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி அருகே உள்ள நந்தவன தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்னன். இவருடைய மகன் சுதாகர் (வயது 30). 6-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். அதே போன்று காசநாயக்கன்பட்டி ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சுந்தரம் மகன் கிருபாகரன் (25). ஓமலூர் கோட்டகவுண்டன்பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் விவேக் (29). இருவரும் பட்டதாரிகள். இவர்கள் 3 பேரும் சேர்ந்து சேலம் தாதுபாய்குட்டை, எப்.எப்.ரோட்டை சேர்ந்த ரவி (56) என்பவரை சந்தித்து, நாங்கள் 3 பேரும் பத்திரிகை நிருபர்கள், எங்களுக்கு மின்சார வாரியத்தில் உயர் அதிகாரிகள் அனைவரையும் தெரியும். எனவே பணம் கொடுத்தால் உங்கள் மகன் நாகேஸ்வரனுக்கு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளனர்.

இதை நம்பிய அவர் கடந்த 1½ ஆண்டில் பல தவணைகளாக ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 300 கொடுத்து உள்ளார். இதே போன்று ரவியின் நண்பர்களான அசோக்குமார் மகன் புதியதர்சன் ரூ.1 லட்சத்து 83 ஆயிரம், ராம்குமார் மகன் நாகேந்திரன் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம், மற்றும் ராஜ்குமார் என்பவர் ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் என 4 பேரும் சேர்ந்து மொத்தம் ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 300 கொடுத்து உள்ளனர்.

பணம் கொடுத்து 1½ வருடம் ஆகியும் அவர்கள் 3 பேரும் வேலை வாங்கித்தர வில்லை. இதைத்தொடர்ந்து ரவி அவர்களிடம் கேட்டு உள்ளார். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் 3 பேரும் சேர்ந்து வேலை வாங்கி தரமுடியாது என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து பணம் மோசடி செய்து உள்ளனர் என்பதை தெரிந்து கொண்ட ரவி, இது குறித்து நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 3 பேரும் சேலம் வள்ளுவர் சிலை அருகே நின்று கொண்டு இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறுகையில், சுதாகர், கிருபாகரன், விவேக் ஆகிய 3 பேரும் நிருபர்கள் என்று கூறி 4 பேரை ஏமாற்றி பணம் மோசடி செய்து உள்ளனர். இவர்கள் குறித்து விசாரித்த போது 3 பேரும் போலி நிருபர்கள் என்பது தெரிந்தது என்றார். வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 300 மோசடி செய்த போலி நிருபர்கள் 3 பேர் கைது செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்